நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது - பொள்ளாச்சியில் சீமான் பேச்சு
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று பொள்ளாச்சியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.;
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜாவை ஆதரித்து நேற்று இரவு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
படித்த 20 ஆண்கள், 20 பெண்கள் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்து பாலின புரட்சியை நாங்கள் நிகழ்த்தி உள்ளோம். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் உலகம் முழுவதும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகம். உலகில் எல்லாம் உயிர்க்கும் உலகபொது நூல் தந்தவர் வள்ளுவர். படிப்பதற்கு தெருவில் இரண்டு நூலகங்கள் இல்லை. ஆனால் தெருவிற்கு இரண்டு டாஸ்மாக் மதுபானகடைகள் உள்ளன. இது வெட்கக்கேடானது. மது கடைகளை மூடினால் அரசு தள்ளாடி விடும் என கூறுகின்றனர். இது மிகவும் அவமானம் ஆகும். அரசு பள்ளிகளில், அரசு ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை. தனியார் பள்ளிகளில்தான் சேர்க்கின்றனர். இதில் இருந்து அரசு பள்ளிகளின் தரம் கெட்டு உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
இதேபோல், அரசு மருத்துவமனைகளில் மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதாகூட சிகிச்சைபெற சென்றதில்லை. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் தரம் கெட்டு உள்ளதை தெரிந்து கொள்ளலாம். தரம் கெட்ட ஆட்சி தான்கடந்த 50 ஆண்டுகளாக இங்கு நடந்து வருகிறது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.44 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
இந்த இழப்பு ரூ.400 கோடி, ரூ.4 ஆயிரம் கோடியாக இருக்கும் போது ஏன் சரிசெய்யமுடியவில்லை. அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்புறம் எப்படி? இழப்பு ஏற்படுகிறது. தனியார் பஸ்களுக்கு புதிய வழித்தடம் பெறுவதற்கு போட்டி போடுகிறார்கள். நிர்வாக சீர்கேடு காரணமாகத்தான் போக்குவரத்து கழகத்தில் இழப்பு ஏற்படுகிறது.
டாஸ்மாக்கில் மட்டும் இந்த அரசு பாஸ்மார்க் வாங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் ஒரு இஸ்லாமியரைகூட வேட்பாளராக நிறுத்த வில்லை. நாங்கள் 5 பேரை நிறுத்தி உள்ளோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது. நாங்கள் சரியானவர்கள். சரியான பாதையில்செல்கிறோம். பிரபாகரனின் பிள்ளைகள். மத்தியில் 50 ஆண்டுகள்ஆட்சி செய்த காங்கிரஸ், 5 ஆண்டு நிறைவு செய்த பா.ஜ.க. ஆகியவற்றதால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை.
நாங்கள் 40 தொகுதிகளில் போட்டி இடுவதை பல பத்திரிகைகள் செய்தியாக வெளியிடுவதில்லை. ரஜினிகாந்த் போட்டியிடாததை தலைப்பு செய்தியாக போடுகின்றனர். நாம் தமிழர் கட்சி அல்ல. நாம்பிறந்த இனத்தின் அடையாளம். சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் தமிழராக இணைய வேண்டும். நாங்கள்ஆட்சிக்கு வந்தால் விவசாயம் தேசிய தொழிலாக அறிவிக்கப்படும். ஆடு, மாடு மேய்த்தல், அரசு பணியாக ஆக்கப்படும். தண்ணீர் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். ஆகவே எங்கள் கட்சி வேட்பாளருக்கு விவசாயி சின்னத்தில் தவறாமல் ஓட்டுப்போடுங்கள்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி. இருப்பினும் இக்கட்சிகளுக்கே பலர் வாக்கு அளிக்கின்றனர். கேட்டால் பழக்கமாகி விட்டது என கூறுகின்றனர். ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். சிறந்த ஆட்சியை தருகின்றோம். தமிழக அரசை குருமூர்த்தி, கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் தான் ஆட்சி செய்கின்றனர். வாக்கு என்பது ஒரு வலிமையான ஆயுதம். இதை நல்லவர்களுக்கு செலுத்த வேண்டும். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் 30 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகின்றனர். பெரிய கட்சிகள் தனித்து நிற்க பயப்படுகின்றனர். இதற்கு காரணம் நேர்மை இல்லை என்பதே உண்மை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாற்று கட்சியை சேர்ந்த பலர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.