தேர்தல் நடத்தை விதிமீறல், முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு
தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், கோபிநாத் உள்பட மொத்தம் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்வட்டச்சாலை அருகில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓசூர் பறக்கும் படை சிறப்பு தாசில்தார் இளங்கோ ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் முரளிதர், நகர செயலாளர் நீலகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.மனோகரன், கோபிநாத் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை பக்கமாக ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதி பெறாமல் 5 தி.மு.க. கொடிகளை கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஓசூர் கோவிந்தராஜ் நகரைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஆனந்த் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல கந்திகுப்பத்தில் காங்கிரஸ் கட்சி சின்னத்தை பெட்டிக்கடை சுவர்களில் அனுமதியின்றி வரைந்ததாக பர்கூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் யாதவராஜ் (48), இந்திரா நகரைச் சேர்ந்த ஜக்கப் (50) ஆகியோர் மீது கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராயக்கோட்டையில் அ.தி.மு.க. சுவர் விளம்பரத்தை அனுமதியின்றி வீட்டு சுவரில் வரைந்ததாக மல்லேஷ் என்பவர் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், ராயக்கோட்டை ரகமத் காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் புருஷப்பன் (47) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குருபரப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரம் கிராம நிர்வாக அலுவலர் விடுதலை விரும்பி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கொரல்நத்தம் கிராமத்தில் தனியார் ஒருவரின் வீட்டு சுவரில் அனுமதியின்றி அ.தி.மு.க. சுவர் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விடுதலை விரும்பி கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார், கொரல்நத்தம் அ.தி.மு.க. கிளை செயலாளர் பொன்னுசாமி (65) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாச்சிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வேப்பனப்பள்ளி அருகே உள்ள கதிரிப்பள்ளி ஊராட்சி டி.வி. அறை கட்டிட சுவரில் அ.தி.மு.க. சின்னம் வரையப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் கதிரிப்பள்ளியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சங்கர் (54) என்பவர் மீது வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தனப்பள்ளியில் அ.தி.மு.க. சின்னத்தை, பெட்டிக்கடை ஒன்றின் சுவரில் அனுமதியின்றி வரைந்ததாக உத்தனப்பள்ளி போலீசார், உத்தனப்பள்ளி கிளை அ.தி.மு.க. செயலாளர் ஜெய்சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கெலமங்கலத்தில் பெட்டிக்கடை ஒன்றில் அனுமதியின்றி காங்கிரஸ் சின்னத்தை வரைந்ததாக கெலமங்கலம் நேதாஜி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் முருகன் (48) என்பவர் மீது கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.