பா.ஜ.க.-அ.தி.மு.க. அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி கே.எஸ்.அழகிரி பேச்சு

பா.ஜ.க.-அ.தி.மு.க. அமைத்திருப்பது பொருந்தாத கூட்டணி என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2019-04-02 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து, மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் பெரம்பலூர் தேரடித்திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாரிவேந்தரை ஆதரித்து பேசியதாவது;-

உலகின் வல்லரசாக இந்தியா வளர்ந்துள்ளதற்கு அடிப்படை காரணம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 15 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் நிலையில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை ஐ.நா. சபை பாராட்டி பரிசு பத்திரம் வழங்கியது. அந்த பரிசு பத்திரத்தை, பா.ஜ.க. தலைவர் அத்வானி கைகளால் மன்மோகன்சிங் பெற வைத்தார். இந்திய ஜனநாயகத்தின் சிறப்பை மாட்சிமை மிக்கவாறு நாங்கள் ஆட்சியை நடத்தினோம். இதுபோன்ற மாட்சிமை மிக்க செயலை பிரதமர் நரேந்திரமோடி செய்வாரா?.

காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட உன்னத திட்டமான கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தினால் ஏழ்மை விலகியது. ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தவுடன், அந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யுமாறு அந்தந்த மாநில முதல்-மந்திரிகளை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். இது தற்காலிக தீர்வுதான் என்கிறார்கள் பா.ஜ.க.வினர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு இடையில் நோயின் கடுமையை தீர்ப்பது போல இது தற்காலிக தீர்வு என்பது எங்களுக்கும் தெரியும்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. ஆட்சி புரிவது பா.ஜ.க. அரசில்லை. அது நரேந்திரமோடியின் அரசு என்று பா.ஜ.க.வினரே கூறுகின்றனர். அந்த அளவிற்கு மோடி சர்வாதிகாரத்துடன், அதிகார மையமாக செயல்பட்டு ஆட்சியை நடத்தி வருகிறார். பா.ஜ.க. ஜனநாயகமில்லாத கட்சியாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க.- காங்கிரஸ் கூட் டணியானது பொருந்தாத கூட்டணி என்று கூறி வருகின்றனர். பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. அமைத் துள்ள கூட்டணிதான் பொருந்தாத கூட்டணி ஆகும். தி.மு.க.- காங்கிரஸ்- பொதுவுடைமை கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கொள்கை அளவில் ஒரே நேர்கோட்டில் இணைந்திருக்கிறோம். இந்தக் கூட்டணி அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் திருச்சி வேலுசாமி, சுப.சோமு, இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் ரவிபச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன், மாவட்ட தலைவர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் இரா.கிட்டு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் மற்றும் முஸ்லிம் லீக், அமைப்புசாரா தொழிலாளர் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்