பாதிக்கப்படுவோர் மனு அளித்தால் சட்டபோராட்டம் நடத்தி 4 வழி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவேன்

பாதிக்கப்படுவோர் மனு அளித்தால் சட்டபோராட்டம் நடத்தி 4 வழி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவேன் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

Update: 2019-04-02 23:00 GMT
திருக்கடையூர்,


சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை 4 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றன. கையகப்படுத்தும் நிலத்திற்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்றும், இந்த பணியால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று மக்கள் பாதுகாப்பு கழக நிறுவனரும், சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி அல்லிவிலாகம், கருவி, தலைச்சங்காடு, அன்னப்பன்பேட்டை, ஆக்கூர் முக்கூட்டு ஆகிய பகுதிகளில் 4 வழி சாலைக்கு கையகப்படுத்த உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், மரங்கள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஆக்கூர் முக்கூட்டில் டிராபிக் ராமசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக குறைந்த விலைக்கு நிலங்களை இழக்கும் விவசாயிகளும், பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகளும் என்னிடம் மனு அளித்தால் கோர்ட்டு மூலம் தொடர் சட்ட போராட்டம் நடத்தி, 4 வழி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவேன். நாடாளுமன்ற தேர்தலில் கட்சி, சின்னம், சுயேச்சை என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு கட்டாயமாக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்