அழகிகளிடம் உல்லாச ஆசை, ரூ.46 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அதிகாரி
அழகிகளிடம் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ரூ.46 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பை,
மும்பை குரார் பகுதியில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி (வயது65) வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் ஓய்வுபெற்ற அதிகாரி இணையதளத்தை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, ஆபாச இணையதள பக்கத்தின் விளம்பரம் வந்தது. அதை பார்த்து சபலம் அடைந்த அதிகாரி, அந்த இணையதள பக்கத்துக்குள் சென்று பார்த்தார்.
அதில் பெயர், விவரங்களை கொடுத்து உறுப்பினராக இணைந்தால் இளம் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறப்பட்டு இருந்தது. எனவே அதிகாரி தனது விவரங்களை அதில் பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து பெண் ஒருவர் அவருக்கு போன் செய்தார். அந்த பெண் ரூ.10 லட்சம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் 3 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். மேலும் பல்வேறு சேவை கட்டணங்களும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதை நம்பிய அவர், பெண் கூறிய வங்கிக்கணக்குக்கு பல லட்சம் ரூபாயை அனுப்பி வைத்தார்.
இந்தநிலையில் அந்த பெண், வேறு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கொடுத்தார். அந்த பெண்ணும் பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறி பணத்தை கறந்தார். இதன் மூலம் அவர் சேமித்து வைத்திருந்த ரூ.46 லட்சத்தை அந்த பெண்களிடம் இழந்தார்.
மேலும் அவர்கள் கூறியது போல உல்லாசத்துக்கும் அழகிகளை அனுப்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி சம்பவம் குறித்து குரார் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரியிடம் நூதனமுறையில் பணமோசடியில் ஈடுபட்ட கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.