ரூ.2 ஆயிரத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்: ‘‘ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வாங்குங்கள்’’ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு

ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தால் வாங்காதீர்கள் என்றும், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பாக பேசினார்.

Update: 2019-04-01 23:15 GMT

அலங்காநல்லூர்,

தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அளவிலான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் அலங்காநல்லூரில் நடந்தது. மதுரை வடக்கு புறநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன் வரவேற்றுப் பேசினார்.

கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:–

தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி. மத்தியில் பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சி. இதனை மக்கள் அனுமதிக்கக்கூடாது. வருகிற தேர்தல் மூலம் அந்த ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும். அவர் அறிவித்த ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம், ஏழை விவசாய மக்களுக்கு நேரடியாக கிடைக்கும். தமிழகத்தில் மிக விரைவில் ஸ்டாலின் முதல்–அமைச்சராக வரவேண்டும். இதற்காக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும்.

ஓட்டுக்கு ரூ.1,000, ரூ.2,000 கொடுத்தால் வாங்காதீர்கள். அதையே ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பணம் உங்களுடையது தான்.

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெறாது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் பாலமேடு பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்