காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை

காரியாபட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update: 2019-04-01 22:45 GMT

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே உள்ள கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்புக்குள்ளாகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். பலமுறை அதிகாரிகளிடம் தகவல் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த கீழ உப்பிலிகுண்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் காரியாபட்டி யூனியன் அலுவலகம் வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்துவிட்டு தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று யூனியன் அலுவலகம் முன்பு அமர்ந்து இருந்தனர். இதைத் தொடர்ந்து காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் வினோத் குமார் ஆகியோர் அதிகாரிகளுடனும், பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும், 2 நாட்கள் கழித்து நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். அதன்பின்னர் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்