பா.ஜனதாவின் கைப்பாவையாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேச்சு

பா.ஜனதாவின் கைப்பாவையாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்று திருப்பூரில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2019-04-01 23:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.ஆர்.செல்வமும் மற்றும் கோவை தொகுதி வேட்பாளராக அப்பாதுரையும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அந்த வகையில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோட்டில் நேற்று மாலையில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 18 தொகுதிகளிலே 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், இந்த துரோகிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழகத்தை வஞ்சிக்கின்ற மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஒரு கூட்டணியாகவும், மற்றொருபுறம் ஏற்கனவே தமிழ்நாட்டை வஞ்சித்த காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் மதசார்பற்ற கூட்டணி என்கிற பெயரிலே ஒரு துரோக கூட்டணியும், ஏற்கனவே தமிழ்நாட்டை ஏமாற்றியவர்கள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்கின்றனர்.

தமிழகத்தில் நடக்கின்ற ஆட்சி மக்களுக்கான ஆட்சியா? அல்லது ஒப்பந்தம் எடுப்பவர்களுக்கான ஆட்சியா? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இது மக்களுக்கான ஆட்சி என்றால் மக்களை பாதிக்கின்ற எந்த திட்டத்தையும் இங்கே செயல்படுத்த விட்டிருக்கமாட்டார்கள்.

தொழில்கள் பாதிக்கும் என்பதால்தான் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், இன்றைக்கு தமிழகத்திலே பின்னலாடை தொழில் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்க தான் செய்துள்ளனர். பின்னலாடை தொழிலும், தொழிலாளர்களும் மோடியின் ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழிலை பாதிக்கும் பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணியை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சிக்காக திருப்பூர் குமரன் பெயரில் கைத்தறி மற்றும் பின்னலாடை தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும். தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

தற்போதைய அரசு தொழில் வளர்ச்சியை பெருக்கிவிட்டதாக பொய்பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்டி.யில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரி விதிப்புகளை மாற்றி, மீண்டும் பழைய அளவிலே வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளைய பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை மட்டுமின்றி அ.தி.மு.க.வையும் மத்திய அரசுக்கு அடகு வைத்துவிட்டனர்.

இதனால் இந்த இயக்கத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்க வேண்டும். கேரளாவிலே ராகுல் காந்தி போட்டியிடுகின்ற வயநாடு தொகுதியிலே கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை நிறுத்தி, எதிர்த்து போட்டியிடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டிலே காங்கிரஸ் கட்சியுடன், கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இது முரண்பாடாக உள்ளது.

எனவே, கம்யூனிஸ்டு இயக்கங்களை புறக்கணிக்க வேண்டும். அவர்கள் மாநிலத்துக்கு மாநிலம் நிறம் மாறுகிறார்கள். மோடியை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும். நீட் தேர்வை யார் தடைசெய்கிறார்களோ? அவர்களைத்தான் நாம் இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுப்போம். திருப்பூர் மாவட்டத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள மானியத்தொகையை பெற்றுத்தரவும், நெசவாளர்களுக்கான நூல் கிடைப்பதில் சிரமத்தை போக்க அரசு குறைந்த விலையில், தரமான நூல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வட்டியில்லா கடன் வழங்கப்படும். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் நெசவுப்பாடத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படும். ஸ்டாலின் மட்டுமே ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அந்த கட்சியினர் கூட இதுவரை ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் இல்லை.

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் பணத்தை முன்வைத்தே வாக்குகள் சேகரித்து வருகின்றனர். மக்களையோ, தொண்டர்களையோ அவர்கள் நம்பவில்லை. பா.ஜனதாவின் கைப்பாவையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. மோடியுடன் நாங்கள் சமரசம் செய்திருந்தால், இப்போது யார் முதல்–அமைச்சராக இருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் சமம் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம்.

சிறுபான்மையினரை அச்சத்தில் ஆழ்த்தி பெரும்பான்மையினரின் ஓட்டை மட்டுமே பெற சில கட்சிகள் முயன்று வருகின்றனர். தேவையின்றி முத்தலாக் தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து, இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்க நினைக்கிறது. இதனால் முத்தலாக் சட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளுடன் சேர்ந்து ஆலோசித்து திருத்தங்கள் கொண்டுவரப்படும். வக்புவாரிய சொத்துக்களை கணக்கெடுத்து முஸ்லிம் ஏழைகளுக்கு வீட்டு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். வக்புவாரியம் மூலம் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்