சீர்மரபினர் சான்றிதழ் வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
சீர்மரபினர் சான்றிதழ் வழங்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல்,
முத்தரையர் டி.என்.டி. உரிமை மீட்பு இயக்கத்தினர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் மாவட்டத்தில் பெருவாரியாக வலையர் மக்கள் வாழ்கிறோம். எங்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு சீர்மரபினர் (டி.என்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) என்று சான்றிதழ் கொடுக்கின்றனர்.
தமிழகத்தில் வலையர் உள்பட 68 சாதியினருக்கு சீர்மரபினர் வகுப்பினர் என்று சாதி சான்றிதழ் வழங்க 1979-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வலையர்களும் அடங்குவார்கள். ஆனால், வலையர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றே சாதி சான்றிதழ் வழங்குகின்றனர்.
இதனால் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் அரசின் உதவித்தொகை ஆகியவை கிடைப்பதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே சீர்மரபினர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த குளறுபடியை சரிசெய்வதற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.
மேலும் வலையர்களுக்கு சீர்மரபினர் வகுப்பினர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். அதேபோல் சீர்மரபினர் நலவாரிய அடையாள அட்டைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். இதற்காக வீடுகளில் கருப்பு கொடி கட்டி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர், என்று கூறப்பட்டுள்ளது.