தனது கட்சியை தானே அழித்துக்கொண்டவர் வைகோ ஈரோட்டில் அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் பேச்சு

தனது கட்சியை தானே அழித்துக்கொண்டவர் வைகோ என்று ஈரோட்டில் அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் கூறினார்.;

Update: 2019-04-01 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக வெங்கு என்கிற மணிமாறன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை ஆதரித்து அ.தி.மு.க. தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை பேச்சாளர் நெத்தியடி நாதன் ஈரோட்டில் காலிங்கராயன்பாளையம், பி.பி.அக்ரஹாரம், பெரியவலசு, சூரம்பட்டி ஆகிய பகுதியில் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

ஈரோடு பெரியவலசு பகுதியில் அவர் பேசும்போது கூறியதாவது:–

எம்.ஜி.ஆரின் அசல் வாரிசாக இருந்தவர் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்கள்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள வெங்கு என்கிற மணிமாறன் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து வைகோ தனிக்கட்சி ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தார். ஆனால் தற்போது அவர் தன்னுடைய கட்சியை தானே அழித்துக்கொண்டு தி.மு.க.வில் போய் சேர்ந்திருக்கிறார்.

அ.தி.மு.க., பா.ம.க. முரண்பாடான கூட்டணி என்று வைகோ கூறி வருகிறார். ஆனால் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இயற்கையான கூட்டணி ஆகும். தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் தான் முரண்பாடான கூட்டணி.

அரசியல் பற்றி மு.க.ஸ்டாலினுக்கே ஒன்றும் தெரியாது. அதற்குள் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்துவிட்டார். கருணாநிதி இருந்தபோதே தி.மு.க.வை பந்தாடிய கட்சி அ.தி.மு.க.. அதனால் இப்போது அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்தது. எனவே அவர் பாரத நாட்டின் பாதுகாவலராகவும், பாதுகாக்கக்கூடியவராகவும் உள்ளார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு தலைமை பேச்சாளர் நெத்தியடி நாதன் கூறினார்.

மேலும் செய்திகள்