காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கும் விழா

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்கள்.

Update: 2019-04-01 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூரை அடுத்த புட்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்க முடிவு செய்தனர். அந்த பள்ளிக்கு தேவையான பீரோ, மின்விசிறிகள், நாற்காலிகள், பள்ளி உபகரணங்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்கள்.

இந்த கல்வி சீர்வரிசையை புட்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து பள்ளி வரை மேளதாளத்துடன் பேரணியாக கொண்டு வந்து வழங்கினார்கள். இதில் தலைமை ஆசிரியர் தாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் சீர் வழங்கும் விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா பள்ளி தலைமை ஆசிரியர் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார கல்வி அலுவலர்கள் முனிராஜசேகர், பூவரசு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கு மாலை அணிவித்து, மேள தாளத்துடன் ஊர்வலமாக அவர்கள் அரசு பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வின்போது பெற்றோர்கள் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை சீர்வரிசையாக வழங்கினர்.

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் லத்தூர் ஒன்றியம் தட்டாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணிக்கு, வட்டார கல்வி அலுவலர் பழனிவேலன் தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி, பீரோக்கள், அலமாரி உள்பட உபகரணங்கள் சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டு தலைமை ஆசிரியை நாசினி பேகத்திடம் பெற்றோர், பொதுமக்கள் வழங்கினர்.

மேலும் செய்திகள்