53-வது நாளாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்டராமர் சிலை
53-வது நாளாக ஒரே இடத்தில் கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கர்நாடகா மாநிலம் தெற்கு ஈஜிபுரா பகுதியில் 108 அடி உயரத்தில் விஸ்வரூப கோதண்டராமர் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக சிலை செய்ய 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் பாறை வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் மட்டும் வடிவமைத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி பிரமாண்ட லாரியில் அந்த சிலை புறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப் பேட்டைக்கு வந்தது.
தொடர்ந்து அந்த லாரி கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு சாலையில் சென்றது. அங்கு குருபரப்பள்ளி அருகில் மார்க்கண்டேயன் நதியை கடக்க முடியாது என்பதால் தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டு சிலை கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சாமல்பள்ளம் அருகில் அந்த சிலை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி முதல் நேற்று வரையில் அந்த இடத்திலேயே பிரமாண்ட கோதண்டராமர் சிலை இருக்கிறது. கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக இடங்களில் சிறு பாலங்கள் வருகின்றன. அந்த பாலங்களில் செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதற்காக ஆங்காங்கே மண்ணை கொண்டு தற்காலிகமாக சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேரண்டப்பள்ளியில் வனப்பகுதியையொட்டி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அங்கு தற்காலிக பாதை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக நேற்றுடன் தொடர்ந்து 53 நாட்களாக ஒரே இடத்திலேயே கோதண்டராமர் சிலை லாரியுடன் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.