கலசபாக்கம் அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை வாலிபர் கைது

கலசபாக்கம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-01 22:45 GMT
கலசபாக்கம்,

கலசபாக்கத்தை அடுத்த களஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. இவரது மகள் சுகன்யா (வயது 19). இவர் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். களஸ்தம்பாடி கிராமத்தின் அருகில் உள்ள கிளாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27), நெல் அறுவடை எந்திர டிரைவர். இவரும், சுகன்யாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று சுகன்யாவிற்கும், ஜெயராமனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுகன்யா வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த சுந்தரமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சுகன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவிற்கு ஜெயராமன் தான் காரணம் என்றும், அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்