செயற்கை அறிவு தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய கவுன்சில்
இணையம் மற்றும் மென்பொருள் துறையின் ஜாம்பவானாக திகழும் கூகுள், செயற்கை அறிவு தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய கவுன்சிலை தொடங்கி உள்ளது.
அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஒரு தொழில்நுட்ப மாநாடு நடந்தது. அதில் தொழில்நுட்ப நிபுணர்கள், டிஜிட்டல் நெறிமுறையாளர்கள் கலந்து கொண்டனர். முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம், செயற்கை அறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பற்றியும், அவற்றை நெறிமுறைப்படுத்துவது பற்றியும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொண்ட கூகுளின் முதுநிலை துணை தலைவர் கென்ட் வாக்கர், “கூகுள் தனிக்கான செயற்கை அறிவு தொழில்நுட்பத்திற்கான சர்வதேச ஒழுங்குவிதிகளை பின்பற்றுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஆயுதம் தயாரிப்பு உள்ளிட்ட தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தும் தகவல்கள் கலிபோர்னியாவில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் செயற்கை அறிவு நுட்பம் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய கவுன்சில் அவசியமாகிறது. அதை கூகுள் முன்னெடுக்கிறது” என்றார்.
மாநாட்டில் 8 நபர்கள் கொண்ட உலகளாவிய செயற்கை அறிவு கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஏப்ரலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய தகவல்கள் கூகுள் பிளாக் போஸ்ட் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.