போக்குவரத்து விதிகளை மீறினால் படம் பிடித்து அனுப்பலாம், 12 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்த ‘மின்னணு கண்’ செயலி

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொதுமக்களே படம் பிடித்து அனுப்பி வைக்க ‘மின்னணு கண்’ என்ற செயலியை 12,000 பேர் பதிவிறக்கம் செய்தனர்.

Update: 2019-03-31 23:35 GMT
கோவை,

போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து அனுப்பும் வகையில் கோவை மாநகர போலீஸ் சார்பில் ‘மின்னணு கண்’ (இ-ஐ) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இது கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த செயலியை இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

இது குறித்து கோவை போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகர போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின்னணு கண் செயலியை ஆன்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துபவர்கள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அந்த செயலிக்குள் நுழைந்து தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்தால், சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண் போக்குவரத்து காவல் துறையின் அலுவலக கணினியில் பதிவாகி விடும்.

இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் உள்ள லொக்கேசன் செட்டிங்கை ஆன் செய்து புகைப்படம் எடுத்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த படத்தில் எடுக்கப்பட்ட இடம், நேரம், அனுப்பியவரின் பெயர், மொபைல் எண் ஆகியவை போக்குவரத்து காவல் துறை அலுவலக கணினியில் பதிவாகி விடும். உடனே போக்குவரத்து விதிமீறல் குறித்த விவரங்கள், அபராதத்தொகை ஆகியவை தானாக கணக் கீடு செய்யப்பட்டு அதற்கான ரசீதும் அச்சாகி விடும். இதை கண்காணிப்பதற்காக 10 குழுக்கள் அமைக் கப்பட்டு உள்ளது.

போலீசாரின் மின்னணு கண் செயலியை இதுவரை 12 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். அந்த செயலி மூலம் போக்குவரத்து விதிமீறல் பற்றிய 7,988 புகைப்படங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் போக்குவரத்து விதிகளை 3,370 பேர் மீறியது புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. வாகன எண் தெளிவாக தெரியாததால் 4,370 புகைப் படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. போக்குவரத்து விதியை மீறியதாக மொத்தம் ரூ.11 லட்சத்து 89 ஆயிரத்து 100 அபராதத்தொகை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்