போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.84 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி புதுவை ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ரூ.84 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் போலீஸ் பிடியில் சிக்கினார்.

Update: 2019-03-31 23:00 GMT

புதுச்சேரி,

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பாவேஷ் ஓரா (வயது 44). புதுவை புஸ்சி வீதியில் வசித்து வரும் இவர், நேரு வீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாவேஷ் ஓராவை சிலர் போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், மத்திய அரசின் சிறப்பு இன்சூரன்ஸ் திட்டத்தில் தாங்கள் பணிபுரிந்து வருவதாக கூறினர்.

நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்தால் ரூ.2 கோடி வரை கடன் வாங்க முடியும் என்றும், கட்டிய தொகை முதிர்வு வரும் போது வட்டியுடன் சேர்ந்து இருமடங்காக கொடுக்கப்படும் என்றும் அவரிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய பாவேஷ் ஓரா, அந்த நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆன்–லைன் மூலம் பல தவணைகளாக ரூ.84 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதற்கிடையே அவரது ஜவுளிக்கடையில் வியாபாரம் நலிவடைந்தது. எனவே அவரால் பிரிமியம் தொகையை செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இதுவரை செலுத்திய தொகையை திரும்ப வாங்கலாம் என முடிவு செய்தார். இதற்காக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு செலுத்திய பணத்தை திரும்பத் தரும்படி பாவேஷ் ஓரா கேட்டார்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து விசாரித்தபோது, அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் போலியானது என்பதும் ரூ.84 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பதையும் அறிந்து பாவேஷ் ஓரா அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் கடந்த 30.8.2018 அன்று புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த சந்தீப்சர்மா, வினோத்கபூர், ஆர்.கே.ரண்ட்வா, ராமச்சந்திரசிங் திஷாக் உள்பட 5 பேர் போலியாக இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் டெல்லி சென்று முகாமிட்டு குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அங்கு இந்த மோசடி கும்பலின் தலைவன் டெல்லியை சேர்ந்த முகமது தில்சார்ஷாவை (27) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 வயர்லெஸ் போன், 2 செல்போன், 2 லேப்–டாப், மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முகமது தில்சார்ஷாவை புதுவை கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இதேபோல் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்