குளத்தூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

திருவாடானை தாலுகா குளத்தூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-03-31 22:30 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா குளத்தூர் ஊராட்சி குணபதிமங்கலத்தில் உள்ள தரைமட்ட தொட்டியில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சியை சேர்ந்த கீழ்க்குடி, பூசாரி ஏந்தல், செக்காந்திடல், குணபதிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வறட்சி காரணமாக சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குணபதிமங்கலம் கிராமத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தேக்கப்படும் குடிநீரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிலர் தினமும் எடுத்துச்செல்வதாக தெரிகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள குணபதிமங்கலம், கீழ்க்குடி, பூசாரி ஏந்தல், செக்காந்திடல் ஆகிய கிராமங்களுக்கு முறையான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதுகுறித்து இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி திருவாடானை தாலுகா குழு உறுப்பினர் கீழ்க்குடி பாலுச்சாமி கூறும்போது, குணபதிமங்கலம் தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து குளத்தூர் ஊராட்சியை சேர்ந்த நான்கு கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. ஆனால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த தொட்டியில் இருந்து குடிநீரை எடுத்துச்செல்கின்றனர். இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கீழ்க்குடி உள்பட பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் சீராக நடைபெறாததால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குடிநீர் வினியோகம் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதி மக்களை திரட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்கள் முன்பு காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்