தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் கலெக்டர் தகவல்

தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

Update: 2019-03-31 22:30 GMT

சிவகங்கை,

நடைபெறவுள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து உரிய அனுமதி பெற்று தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொது பார்வையாளர் ஹர்ப்ரீத்சிங் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:– நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கையாண்டு தேர்தல் சிறப்பான முறையில் நடைபெற்றிட முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்திற்கான வாகனங்களுக்கு அனுமதி பெற்ற பின்னரே, அதை பயன்படுத்த வேண்டும் அனுமதி பெறாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகன அனுமதியை பொறுத்தவரை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளவேண்டும்.

வேட்பாளர்கள் மேற்கொள்ளும் பிரசாரத்தின் போது ஏற்படும் செலவினங்களை மதிப்பீட்டுக்குழு அவ்வப்போது கண்காணித்து வருகிறது. மேலும் அதற்குரிய செலவினங்களை அந்தந்த வேட்பாளார் கணக்கில் பதிவு செய்யப்படும்.

மேலும் பிளக்ஸ் பேனர், மின்னணு விளம்பரப்பலகை பொருத்தி விளம்பரம் செய்ய தடைசெய்யப்பட்டுள்ளது. ஆட்டோ ரிக்ஷாக்களில் விளம்பரம் செய்ய விரும்பினால் பெயிண்டால் தயாரிக்கப்பட்ட விளம்பரப்பலகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் உள்ளுர் தொலைக்காட்சிகளிலும், துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரப்பணி மேற்கொள்ள வேண்டுமானால் ஊடக கண்காணிப்பு குழு அனுமதி பெற்று விளம்பரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துண்டு பிரசுரங்கள் மற்றும் வால்போஸ்டர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயரை அடிப்பகுதியில் கண்டிப்பாக அச்சிடிருக்க வேண்டும். ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை பகுதிகளில் வாக்குகள் சேகரிக்க கூடாது.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கண்காணிக்க கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், தேர்தல் தாசில்தார் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்