ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் பணம் கொண்டு செல்ல நடவடிக்கை தேவை
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்கு உரிய ஆவணங்களுடன் வாகனங்களில் பணம் எடுத்து செல்ல வங்கி நிர்வாகத்தினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறைகளின்படி வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கு வாகனங்களில் பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாததால் இதுவரை ரூ.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்து சென்ற வாகனத்தை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் ரூ.1 கோடியே 5 லட்சம் இருந்த நிலையில் ரூ.60 லட்சத்துக்கான ஆவணங்கள் மட்டுமே இருந்ததால் மொத்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று ராஜபாளையம் அருகேயும் ரூ.1½ கோடி வரை ஏ.டி.எம். மையங்களுக்கு கொண்டு சென்ற பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்பது வங்கி நிர்வாகத்தினருக்கும், ஏ.டி.எம். நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனங்களுக்கும் நன்கு தெரிந்துள்ள நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் தொடர்ந்து பணம் அனுப்பும் நடைமுறை ஏன் என்று தெரியவில்லை.
தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்படுவதால், ஏ.டி.எம். மையங்களை தேடி செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும் குறைவான தொகைக்கு ஆவணங்களை வைத்துக்கொண்டு கூடுதல் தொகையை கொண்டு செல்வதால் ஆய்வை மேற்கொள்ளும் பறக்கும்படை அதிகாரிகளுக்கும் வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு இந்த தொகை கொண்டு செல்லப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
எனவே வங்கி நிர்வாகத்தினரும், ஏ.டி.எம். நிறுவனத்தில் பணம் நிரப்பும் பணியை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்தினரும் வாகனங்களில் ஏ.டி.எம். மையங்களுக்காக அவர்கள் அனுப்பி வைக்கப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்களை வாகனத்தில் செல்லும் அலுவலரிடம் ஒப்படைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.