கூட்டணி கட்சியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றுங்கள்: சர்வாதிகாரி நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும் சித்தராமையா பேச்சு

காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றி சர்வாதிகாரி நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

Update: 2019-03-31 23:00 GMT
பெங்களூரு, 

காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்றி சர்வாதிகாரி நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

சித்தராமையா

பெங்களூரு புறநகரில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ராகுல்காந்தி கலந்து கொண்ட இந்த பிரசார கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

மோடிக்கு கடிவாளம்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. விவசாயிகள் கண்ணீரில் கைகழுவும் நிலை உருவாகி உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்கள் பயத்தோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஜனநாயகம், அரசியல் சாசனம் அழிக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. இதை தடுக்க வேண்டும். மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் நரேந்திர மோடிக்கு கடிவாளம் போட வேண்டும். ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளை மறந்து...

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து ஜனதாதளம்(எஸ்)-காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தப்படுகிறது. முதல்-மந்திரி குமாரசாமி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியினர், ஜனதாதளம்(எஸ்) கட்சியினருடனும், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் காங்கிரஸ் கட்சியினருடனும் சேர்ந்து கருத்து வேறுபாடுகளை மறந்து பணியாற்ற வேண்டும். புத்திசாலிகளாக இருக்கும் அனைத்து மக்களும் பா.ஜனதாவுக்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்