உணவு– குடிநீர் தேடி கடம்பூர் மலைக்கிராமங்களுக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம்

உணவு மற்றும் குடிநீர் தேடி கடம்பூர் மலைக்கிராமங்களுக்கு யானைக்கூட்டம் படையெடுத்து வருகிறது.

Update: 2019-03-31 22:30 GMT

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்து விட்டன. செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகின்றன. மேலும் வனக்குட்டைகள், குளங்கள், தடுப்பணைகள் போன்றவை தண்ணீரின்றி வறண்டுவிட்டன. இதனால் உணவு மற்றும் குடிநீர் தேடி யானைகள் மலைக்கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அதன்படி சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட இருட்டிபாளையம், கானக்குந்தூர், அணைக்கரை, எக்கத்தூர், கரளியம், காடகநல்லி உள்பட பல்வேறு மலைக்கிராமங்களுக்குள் யானைக்கூட்டம் அடிக்கடி படையெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அங்குள்ள கானக்குந்தூர் மலைக்கிராமங்களுக்குள் புகுந்தது. அதில் 10–க்கும் மேற்பட்ட யானைகள் இருந்தன. அந்த யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளம், குச்சிக்கிழங்கு, ராகி போன்ற பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. யானைகள் புகுவதை தடுக்க விவசாய நிலங்களில் பரண் அமைத்து காவல் காக்கும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் யானைக்கூட்டத்தை தடுக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளின் தாகத்தை தீர்க்க வனப்பகுதியில் செயற்கை வனக்குட்டைகளும் அமைக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்