அந்தியூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து வியாபாரியின் வீட்டை சேதப்படுத்திய ஒற்றை ஆண் யானை
அந்தியூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து வியாபாரியின் வீட்டை ஒற்றை ஆண் யானை சேதப்படுத்தியது.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் உள்ள துருசனாம்பாளையத்தை சேர்ந்த ராஜா (வயது 40). வியாபாரி. இவருடைய மனைவி சாந்தி. ராஜா தன்னுடைய வீட்டில் விற்பனைக்காக பலாப்பழம், புளி ஆகியவற்றை வாங்கி வைத்து உள்ளார்.
இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஒற்றை ஆண் யானை ஒன்று துருசனாம்பாளைத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை ராஜாவின் வீட்டு பகுதிக்கு வந்தது. அங்கு வீட்டின் முன் பகுதியில் உள்ள ஒரு அறையில் அவர் பலாப்பழம், புளி ஆகியவற்றை வைத்திருந்தார். உடனே அந்த யானை பலாப்பழத்தை எடுப்பதற்காக துதிக்கையால் சிமெண்டால் ஆன மேற்கூரையை பிடித்து இழுத்தது. இதன்காரணமாக வீட்டின் முன் பகுதி உடைந்து விழுந்து சேதம் அடைந்தது.
சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ராஜா, சாந்தி ஆகியோர் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்து பார்த்தனர். அப்போது அங்கு ஆண் யானை ஒன்று நின்று கொண்டு பலாப்பழத்தை தின்று கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீட்டின் கதவை அடைத்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்கள்.
இதுபற்றி அறிந்தும் அக்கம் பக்கத்தினர் ராஜாவின் வீட்டுக்கு வந்து தீப்பந்தங்களை காண்பித்து யானை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை அங்கிருந்து செல்லாமல் போக்கு காட்டியது.
எனினும் பொதுமக்கள் தீப்பந்தங்களை காண்பித்தும், பட்டாசு வெடித்தும், தகர டப்பாவை அடித்து ஒலி எழுப்பியும் தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2½ மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த யானை நேற்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து வனப்பகுதிக்கு சென்றது. யானை புகுந்து அட்டகாசம் செய்ததில் வீடு, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பலாப்பழம், புளி ஆகியவை சேதம் அடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானை சேதப்படுத்திய வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.