தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து 22 வேட்பாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கலெக்டர் ரோகிணி பேச்சு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து 22 வேட்பாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி பேசினார்.

Update: 2019-03-31 22:30 GMT

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும், தேர்தல் செலவினங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்வது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நாடாளுமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ராஜேஷ் மஞ்சு, தேர்தல் செலவின பார்வையாளர் தினேஷ் குமார் மீனா, சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 760 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 2 ஆயிரத்து 132 பெண் வாக்காளர்கள் மற்றும் 90 இதரர் ஆக மொத்தம் 16 லட்சத்து 11 ஆயிரத்து 982 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,803 வாக்குச்சாவடிகளும், 593 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை 24 மணி நேரமும் கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கூடுதல் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தொகுதியின் அனைத்து பகுதிகளும் பறக்கும்படை நிலை கண்காணிப்புக்குழு கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், இதர கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை கண்காணித்து விதிமீறல்கள் இருப்பின் அதன்மீது தேர்தல் விதிகளின்படி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுத்தாலோ அல்லது பணம் பெறுவது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதமோ அல்லது அபராதத்துடன் கூடிய ஓராண்டு சிறை தண்டனையோ அளிக்கப்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக பறக்கும்படை வாகனங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு அதன்மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து 22 வேட்பாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்