நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.3.42 லட்சம் சிக்கியது
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.42 லட்சம் சிக்கியது.
செங்கோட்டை,
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.3.42 லட்சம் சிக்கியது.
செங்கோட்டை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கேரள மாநிலம் அச்சன்கோவிலை சேர்ந்த சுகந்தன் மனைவி ஷீலாகுமாரி என்பதும், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலத்திடம் ஒப்படைத்தனர்.
சுரண்டை அருகே சாம்பவர் வடகரை போலீஸ் நிலையம் முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாருமான செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேனில் வந்த வடிவேல் என்பவரிடம், ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, செங்கோட்டை தேர்தல் துணை தாசில்தார் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர்.
சேரன்மாதேவி
இதே போல் சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் ருக்மணி தலைமையில் சேரன்மாதேவியில் வாகன சோதனை நடந்தது. அப்போது அந்த வழியாக காரில் வந்த ராகவன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அ.தி.மு.க. பிரமுகரான ராகவன், சேரன்மாதேவி யூனியன் முன்னாள் துணை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.