பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுபார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுபார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2019-03-31 22:15 GMT
பெரம்பலூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற தேர்தல் 2019 தேர்தல் அட்டவணை கடந்த மாதம் 10-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற்று, வருகிற மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதனடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொதுபார்வையாளராக மஞ்சுநாத் பஜன்ட்ரி நியமனம் செய்யபட்டுள்ளார். அதனடிப்படையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நேற்று முன்தினம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி லால்குடி வட்டம் தாளக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி, பதற்றமான வாக்குசாவடி என அறியப்பட்ட எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மற்றும் வாளாடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அமையவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு, கழிவறை, சாய்வுதள அமைப்பு, மின்விளக்குகள், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் நாளன்று வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் லால்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உறுதியான அறை பகுதிக்குசென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்