தமிழகத்தில் “மின்வெட்டு இல்லாததற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தான் காரணம்” தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்
“தமிழகத்தில் மின்வெட்டு இல்லாததற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தான் காரணம்“ என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.;
ஆறுமுகநேரி,
“தமிழகத்தில் மின்வெட்டு இல்லாததற்கு பா.ஜனதா, அ.தி.மு.க. அரசுகள் தான் காரணம்“ என்று தேர்தல் பிரசாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலையில் பழையகாயல் மெயின் பஜாரில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திறந்த ஜீப்பில் இருந்து பேசிய அவர் கீழே இறங்கி பஜார் கடைக்காரர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முந்தைய ஆட்சி காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி நிவர்த்தி செய்து தற்போது பல்வேறு புதிய திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் தொடர்ந்து நல்ல திட்டங்களை கொண்டு வரவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் மீண்டும் பிரதமராக வர வேண்டும். பலம் பொருந்திய நாடாக இந்தியா மாறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மோடி எடுத்து வருகிறார். அதற்கு ஆதரவாக அ.தி.மு.க. இருந்து வருகிறது.
உலக தலைவர்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து பல திட்டங்களை நிறைவேற்றி தந்தார். அதில் ஒன்று கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ உதவி மற்றும் அம்மா பெட்டகம் திட்டம். அந்த திட்டத்தை வரவேற்று நான் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். காரணம் நான் ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணர்.
அதேபோல் பல திட்டங்களை அ.தி.மு.க. நிறைவேற்றி வருகிறது. உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி உயர்ந்து நிற்கிறார். உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். வரும் 2020-ம் ஆண்டுக்குள் வீடு இல்லாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையை மோடி அரசு உருவாக்கும். பயிர் காப்பீடு திட்டம் மூலம் 26 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். எனவே மீண்டும் மோடி பிரதமராக வர தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் புல்லாவெளி, மஞ்சல்நீர்காயல் பகுதிகளில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து அவர் முக்காணியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:-
மின்வெட்டு இல்லை
தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. தற்போது மின்வெட்டு இல்லை. காரணம் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், மத்தியில் பா.ஜனதாவும் இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்யவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் உமரிக்காடு, வாழவல்லான், சாயர்புரம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின்போது அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் பாண்டியன், பழையகாயல் ஊராட்சி செயலாளர் வினோத், பா.ஜனதா மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பா.ஜனதா பொறுப்பாளர் செல்வராஜ், பழையகாயல் நகர பா.ஜனதா தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.