டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் பழுதடைந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடல் புதிதாக கட்டப்படுகிறது

டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடப்படுகிறது. அதை இடித்து விட்டு புதிய நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது.

Update: 2019-03-30 23:15 GMT
மும்பை,

டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடப்படுகிறது. அதை இடித்து விட்டு புதிய நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது.

பழுதடைந்த நடைமேம்பாலம்

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ளது டோம்பிவிலி ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்துக்கு தினசரி 3 லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

பயணிகள் வசதிக்காக டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் 3 நடைமேம்பாலங்கள் இருக்கின்றன.

இதில் கல்யாண் நோக்கி செல்லும் மார்க்கத்தில் உள்ள நடைமேம்பாலம் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. எனவே அந்த நடைமேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.

நாளை முதல் மூடல்

அண்மையில் சி.எஸ்.எம்.டி.யில் நடைமேம்பாலம் இடிந்து 6 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, டோம்பிவிலியில் உள்ள இந்த பழுதடைந்த நடைமேம்பாலத்தை இடித்து தள்ளி விட்டு அங்கு புதிய நடைமேம்பாலம் கட்ட மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

இதன்படி புதிய நடைமேம்பாலம் 6 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) முதல் பழுதடைந்த நடைமேம்பாலம் மூடப்படும் என மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்படும் வரை பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள மற்ற இரு நடைமேம்பாலங்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்