தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.2 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையின் மூலம் 161 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மாவட்டத்திற்குள் தொழில் நிமித்தமாக வந்து சென்ற 7 பேரிடம் மொத்தம் ரூ.14 லட்சத்து 61 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு திருவாடானை சி.கே.மங்கலம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் திருப்புல்லாணி குமாரபுரம் தனசேகர் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 550–ஐ பறிமுதல் செய்தனர். அபிராமம் அருகே நல்லுகுறிச்சி அருகே நடத்தப்பட்ட சோதனையில் அபிராமம் மேலக்கொடுமலூர் சேதுராமன் என்பவரிடம் புதிய வாகன பதிவு எண் பெறுவதற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70–ஆயிரத்தையும், கடலாடி பேச்சியம்மன் கோவில் அருகே நடத்தப்பட்ட சோதனையில் சாயல்குடி முகமது அசன் என்பவரிடம் வருமானவரி செலுத்துவதற்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல திருவாடானை சி.கே.மங்கலம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40) என்பவரிடம் ரூ.2 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மதுரை மேலூர் உடப்பன்பட்டியை சேர்ந்த மெய்யநாதன் என்பவரின் நிதி நிறுவன தொகை ரூ.68,550–ஐயும், திருஉத்தரகோசமங்கை அருகே நடத்தப்பட்ட சோதனையில் ஊட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் ரூ.53 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டி சோதனை சாவடி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் தனியார் வங்கி ஏ.டி.எம். வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வங்கி நிறுவனத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தது முதல் நடத்தப்பட்டு வரும் இந்த வாகன சோதனையில் இதுவரை 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 82 லட்சத்து 99 ஆயிரத்து 371 பணமும், ரூ.21 லட்சத்து 81 ஆயிரத்து 840 மதிப்பிலான பொருட்களும் என மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 211 மதிப்பிலான பொருட்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய காரணங்கள் இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.