நெசவு தொழில் வளர்ச்சி பெற தொகுதியில் கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் எச்.ராஜா பேச்சு

சிவகங்கை தொகுதியில் நெசவு தொழில் வளர்ச்சி பெற தொகுதி முழுவதும் கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று எச்.ராஜா பேசினார்.

Update: 2019-03-30 23:00 GMT

காரைக்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா காரைக்குடி நகரில் திறந்த வேனில் சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். கழனிவாசல் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட அவர், அண்ணாநகர் வாட்டர் டேங்க் புதிய பஸ்நிலையம், ரெயில்வே நிலையம், முடியரசனார் சாலை, டி.டி.நகர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பழைய பஸ்நிலையம் உள்ளிட்ட 27 இடங்களில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– உலக நாடுகள் நம்மை மதிக்கவும், பகை நாடுகளால் பிரச்சினை ஏதும் வராமல் இருக்கவும், வலிமையான பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், நாட்டு மக்களுக்கு நலத் திட்டங்களை தந்து, நல்லாட்சி தொடரவும் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். மருத்துவ வசதியை மேம்படுத்தி, நகர, ஒன்றிய அளவிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த தொகுதியின் பிரதான தொழிலாக இருந்து வரும் கைத்தறி நெசவுத் தொழில் வளர்ச்சி பெற, கைத்தறிபூங்காக்கள் தொகுதி முழுவதும் அமைக்கப்படும்.

மேலும் தொகுதி வளர புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும், நான் இங்கே பிறந்து, இங்கேயே வளர்ந்து உங்களுடனேயே வாழ்கிறவன் உங்களது பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். வீடுகளுக்கு மின்சாரம், சமையல் கியாஸ் இணைப்பு என சாதாரண மக்கள் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு தொடர வேண்டுமானல் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பிஆர்.செந்தில்நாதன், ஆவின் சேர்மன் அசோகன், மருத்துவ அணி மாநில நிர்வாகி டாக்டர் சுரேந்திரன், நகர செயலாளர் மெய்யப்பன், இளைஞரணி செயலாளர் இயல்தாகூர், நகர பாஜக. தலைவர் சந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் திருவேங்கடம், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைச் செயலாளர் திருஞானம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்