நாடாளுமன்ற தேர்தலில் “மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது” கி.வீரமணி பேச்சு

திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் ராஜபாளையம் பொன்விழா மைதானத்தில் நடைபெற்றது.

Update: 2019-03-30 22:45 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள பொன்விழா மைதானத்தில், தென்காசி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கி.வீரமணி பேசும்போது கூறியதாவது:–

இந்த தேர்தலில் சிந்திக்காமல் வாக்களித்து விபரீத விளையாட்டு விளையாடினால், கொள்ளிக்கட்டையை எடுத்து நமது தலையில் நாமே சொறிந்து கொண்டதற்கு ஒப்பாகும். தி.மு.க. கூட்டணி திடீரென கூடிய கூட்டணி அல்ல. பேரம் செய்து கூடியது அல்ல. கொள்கை போராட்டத்தில் பூத்தது இந்த கூட்டணி. மோடி கடந்த தேர்தலின்போது வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்பதாக கூறினார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 4½ கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதை நான் புள்ளி விவரத்துடன் தெரிவிக்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் வீசுவது மோடிக்கு எதிரான ஒரு அலையாகும். வடகிழக்கு மாநிலம் தொடங்கி இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட ஒரு சூழல். இந்த ஆட்சி ஒழிக்கப்படவேண்டும். ஜனநாயகம் காக்கப்பட, சமூகநீதி பாதுகாப்பு ஏற்பட தி.மு.க.வை ஆதரிக்க மக்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்