மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி நடுவானில், விமானத்திற்குள் கோ‌ஷமிட்டவர்களால் பரபரப்பு, 8 பேர் கைது

விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி மதுரை வந்த விமானத்திற்குள் கோ‌ஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாரதீய பார்வர்டு பிளாக் நிர்வாகி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-30 22:00 GMT

மதுரை,

சென்னையிலிருந்து நேற்று மதியம் 12.55 மணிக்கு தனியார் விமானம் ஒன்று மதுரைக்கு கிளம்பியது. அந்த விமானத்தில் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன் உள்பட கட்சி நிர்வாகிகளும் வந்தனர். விமானம் திருச்சியை கடக்கும் போது திடீரென்று முருகன் உள்பட அவரது கட்சி நிர்வாகிகள் எழுந்தனர். அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டக்கோரி நடு வானில் விமானத்தினுள் கோ‌ஷம் போட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

பயணிகளும் விமான ஊழியர்களும் பதற்றம் அடைந்தனர். பின்னர் விமான ஊழியர்கள் சென்னை மற்றும் மதுரை விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மதுரை விமான நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் விமானம் தரையிறங்கியதும் போலீசார் விமானத்தின் உள்ளே சென்று நடுவானில் விமானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்தனர். அதில் பாரதீய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், மூவேந்தர் முன்னணி கழகம் செந்தூர் பாண்டியன், ஞானசேகரன், வல்லரசு, பாடலூர் மோகன்குமார், ஈஸ்வரன், சிவச்சந்திரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் முருகன்ஜி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் சக பயணிகளுடன் பயணிகளாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதற்கிடையே மதுரை விமான நிலையத்தின் வெளியே முருகனை வரவேற்க வந்தவர்கள், தகவல் அறிந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே போலீசார் அங்கு லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 3 பேர் யாரென்று பயணிகளின் பெயர் பட்டியலை வைத்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்