திருப்பூர் பனியன் நிறுவன அதிபரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி

திருப்பூர் பனியன் நிறுவன அதிபரிடம் ரூ.2 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-30 22:45 GMT

திருப்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பொருள் கொடுப்பதை தடுக்கும் நோக்கில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக ஏராளமான நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ரோந்து பணி மற்றும் வாகன சோதனை நடத்தி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் செட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் திருப்பூர் வடக்கு பறக்கும்படை அதிகாரி சிங்காரவேல் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி, அதை சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.2 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த போயம்பாளையம் பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன அதிபர் சுதாகர் என்பவரிடம் பணத்திற்குரிய ஆவணங்களை காண்பிக்கும்படி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் உரிய ஆவணங்கள் அவர் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்