வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2019-03-30 23:15 GMT

தாராபுரம்,

தாராபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த பகுதியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து தாராபுரம் வழியாக திருச்சி சாலை வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. அமராவதி அணையிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு, மதிப்பீடுகள் தயாரித்து அதற்கான ஆணை பிறப்பிக்கும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

இங்கு நகர் பகுதியில் பட்டா இல்லாமல் இருந்த 1,500 குடியிருப்புகளுக்கு, அரசு பட்டா வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், முதற்கட்டமாக வழங்கப்படும் தொகை ரூ.2 ஆயிரம் வந்திருக்கிறது.

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம், சாலைப்பணிகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் தற்போது அன்னிய முதலீடு ரூ.3 லட்சத்து 431 கோடியில் புதிய திட்டங்கள் வர இருக்கிறது. அதில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரையில் இந்த ஆண்டு ரூ.28 லட்சத்து 757 கோடி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அனைத்து வகுப்பறைகளிலும் கணினிகள் வைக்கப்பட்டு, அதில் இன்டர்நெட் இணைப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அடுத்த கல்வியாண்டில் 28 லட்சம் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். அதேபோல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷூக்கள் வழங்குவதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. கல்வித்துறையைப் பொருத்தவரை பல்வேறு மாற்றங்களை உருவாக்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பணச்சுமை இல்லாமல், மாணவர்கள் எதிர்காலத்தில் முழு கல்வி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் கல்வி பயில்வதற்கு மானியங்கள் வழங்குவதற்கும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்