வெவ்வேறு சம்பவங்கள்: வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

மார்த்தாண்டம் மற்றும் மண்டைக்காட்டில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.

Update: 2019-03-30 22:15 GMT
குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 33), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த சில நாட்களாக சதீஷ் நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், அவர் மனமுடைந்து காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்தநிலையில், வாழ்க்கையில் வெறுப்புற்ற சதீஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (74). இவர் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனால், மனமுடைந்த செல்வமணி, வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்