‘கோடநாடு விவகாரத்தில் என்னை இணைத்து பேசுபவர்களை சும்மா விடமாட்டேன்’ எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

‘கோடநாடு விவகாரத்தில் என்னை இணைத்து பேசுபவர்களை சும்மா விடமாட்டேன்’ என்று திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

Update: 2019-03-30 23:30 GMT
திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மையப்பன், கொரடாச்சேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், வாளவாய்க்கால், லெட்சுமாங்குடி ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை இணைத்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அந்த கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரை கண்டுபிடித்ததே அ.தி.மு.க.வினர் தான். என்னை பற்றி தவறான தகவல் தெரிவித்ததால் கூலிப்படையினர் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். ஸ்டாலின் உத்தரவின் பேரில் இவர்களை ஜாமீனில் எடுத்துள்ளனர். இதனால் கூலிப்படையினருக்கும், தி.மு.க.வினருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களில் கோடநாடு சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினர் மீது பாலியல் வழக்கு, ஆள்கடத்தல் வழக்கு, போதைப்பொருள் கடத்தல் வழக்கு போன்ற வழக்குகள் உள்ளன. இப்படி பல்வேறு வழக்குகள் உள்ளவர்களுக்கு மனசாட்சி உள்ளவர் யாராவது ஜாமீனில் எடுக்க முன்வருவார்களா? அவர்களை ஜாமீனில் எடுத்தால் அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்களா? ஒரு முதல்-அமைச்சர் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகள் கூறிகிறார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்கள் எப்படி வாழ முடியும். என் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.

இந்த சம்பவத்தில் என்னை இணைத்து பேசுபவர்களை சும்மா விடமாட்டமேன். எனக்கும் பொறுமை உண்டு. அரசியல் ரீதியாக எங்களை எதிர் கொண்டால், நாங்களும் அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். நீங்கள் ஆட்சியில் இருந்தபோது செய்த தவறுகளுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, உங்கள் முகத்திரையை கிழிப்போம். இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்