பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி கேரளாவை சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

பெரியகுளத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவர் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-30 22:00 GMT
பெரியகுளம், 

தேனி மாவட்டம் போடி அசைன் உசேன் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவரிடம் பெரியகுளம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (35) என்பவர் நட்பாக பழகினார். கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாம்சல்ரகுமான் என்பவரை விஜயகுமாருக்கு மணிகண்டன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவர்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரிடம், தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினர். இதை நம்பிய விஜயகுமார் ரூ.5 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

அதேபோல் அவர்கள் இருவரும் சேர்ந்து, மேலும் 6 பேரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி தலா ரூ.5 லட்சம் வாங்கி உள்ளனர். பின்னர் அவர்கள் பணி நியமன உத்தரவை வழங்கினர். அந்த பணி நியமன உத்தரவு போலியானது என 7 பேருக்கும் தெரியவந்தது.

இதையடுத்து விஜயகுமார் பெரியகுளத்துக்கு வந்து மணிகண்டனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத் தை கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் செய்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தென்கரை போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 7 பேரிடமும் மொத்தம் ரூ.35 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக மணிகண்டன், ஷாம்சல்ரகுமான் ஆகிய 2 பேர் மீதும் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்