நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தேனி,
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமாக தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு, இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு தனியாகவும், பொதுத்தேர்தல் நடக்கும் தேனி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தனியாகவும் மையங்கள் அமைக்கப்படுகிறது.
இந்த வாக்கு எண்ணும் மையத்தை தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திரநாத் சர்மா, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் பிரபாகரரெட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் சரளா ராய், போலீஸ் துறைக்கான பார்வையாளர் ரூகாடி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு போதிய முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளதா? பாதுகாப்பான சூழலில் உள்ளதா? என்பதை அவர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருவது, அவற்றை பாதுகாப்பாக வைப்பது, வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள் வரை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடத்தினர். இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் ஆகிய இடங்களையும் தேர்தல் பொது பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.