ஆரணி அருகே பறக்கும்படையினர் சோதனை வீடு கட்டும் பணிக்காக எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் பறிமுதல் போளூர் அருகே பைனான்சியரிடமும் ரூ.2 லட்சம் சிக்கியது

வீடு கட்டும் பணிக்கு பெண் ஒருவர் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை உரிய ஆவணம் இல்லை என கூறி பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் போளூர் அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் பைனான்சியரிடம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-30 22:30 GMT
ஆரணி,

ஆரணி பறக்கும் படை தாசில்தார் பாபு தலைமையில் போலீசார் பிரபாகரன், தனசேகரன், சுசிலா ஆகியோர் நேற்று மாலை ஆரணி-ஆற்காடு நெடுஞ்சாலை ஆதனூர் கூட்ரோட்டில் உள்ள அரசுப்பள்ளி முன்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி அவர்கள் சோதனை செய்தனர். காரில் பயணித்த பெண் ஒருவர் வைத்திருந்த கைப்பையில் ரூ.2 லட்சம் இருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அந்த பெண் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வரும் அய்யப்பன் மனைவி ரோஜா (வயது 28) என்பதும், அய்யப்பனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தற்போது வீடு கட்டி வருவதாகவும், கட்டிடப்பணிக்காக ரூ.2 லட்சத்தை காரில் கொண்டு செல்வதாகவும் கூறினார்.

ஆனால் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை தாசில்தார் பாபு ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து, ஆரணி தாசில்தார் தியாகராஜனிடம் ஒப்படைத்தார்.

இதேபோல் போளூர் அருகே ஆரணி சாலையில் உள்ள ஆலம்பூண்டி பகுதியில் நிலைக்கண்காணிப்புக்குழு அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கரூர் மாவட்டம் எளவனுரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருண்குமார் காரில் வந்தார். அவரது காரை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம் இருந்தது. அருண்குமாரிடம் விசாரித்தபோது அவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்துவதாகவும், கடன் தொகையை வசூல் செய்து கொண்டு சென்று கொண்டிருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.

ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். அதனை போளூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதனிடம் நிலைக்கண்காணிப்புக் குழுவினர் ஒப்படைத்தனர். அதனை மஞ்சுநாதன் போளூர் தாலுகா அலுவலக கருவூலத்தில் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்