குடகனாற்றில் மணல் அள்ளும் கும்பல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

குடகனாற்றில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மணல் அள்ளுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-30 21:45 GMT
செம்பட்டி, 

பழனி மலையில் தொடங்கும் குடகனாறு ஆத்தூர், சீவல்சரகு, வக்கம்பட்டி, வேடசந்தூர் வழியாக செல்கிறது. சமீபகாலமாக குடகனாற்றில் மர்மநபர்கள் மணல் அள்ளி செல்கின்றனர். குறிப்பாக சீவல்சரகு ஊராட்சியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள குடகனாற்று பாலம் பகுதியிலும், வக்கம்பட்டி, கல்நாட்டாம்பட்டி, கூலம்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளிலும் குடகனாறு கரை பகுதிகளிலும் மர்மகும்பல் மணலை அள்ளி செல்கின்றனர்.

அங்கு மணலை மலைபோல் குவித்து வைத்து இரவு நேரங்களில் டிராக்டர்களில் அள்ளிச்செல்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதிலும் சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட வேலகவுண்டன்பட்டி மற்றும் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஐந்து கண் பாலம் அருகே குடகனாற்றுக் குள் தனிப்பாதை அமைத்து மணலை அள்ளி செல்கின்றனர்.

விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் குடகனாறு தடுப்பணையில் மணல் அள்ளி செல்வதால், மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், குடகனாற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதால் ஆங்காங்கே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் குடகனாற்றின் வளமும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பகல் நேரங்களில் தடுப்பணைகளில் மணலை அள்ளி வருகின்றனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்