மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.5½ கோடி பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.5½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-30 22:45 GMT
சேலம், 

நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லும் பணம் மற்றும் தங்கம், சேலை உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத போது அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த குழுவினர் பெரும்பாலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வியாபாரிகள், பொதுமக்கள், ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை தான் பறிமுதல் செய்து வருகிறார்கள். பின்னர் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் காண்பிக்கும் போது திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இவ்வாறு இதுவரை சுமார் ரூ.5½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்