“செங்கோட்டையில் மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்வேன்” தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் பேட்டி
“செங்கோட்டையில் மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்வேன்” என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் கூறினார்.
தென்காசி,
“செங்கோட்டையில் மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்பாடு செய்வேன்” என தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் கூறினார்.
வேட்பாளர் தனுஷ்குமார் பேட்டி
தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் தென்காசியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று மதியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 30 வருடங்களுக்கு பிறகு தென்காசி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இதனை சமர்ப்பிப்பேன்.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைப்பதற்கு, முதல்-அமைச்சராக வர உள்ள மு.க.ஸ்டாலினிடம் வற்புறுத்தி அந்த கோரிக்கையை நிறைவேற்றுவேன். செங்கோட்டையில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் 200 ஏக்கர் உள்ளது. அந்த இடத்தில் ரெயில்வே துறை மூலமாக மருத்துவ கல்லூரி அமைக்க முழு முயற்சி எடுப்பேன். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கேரள மாநில மக்களும் பயன் பெறும் வகையில் இந்த கல்லூரி அமையும்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு
தென்காசியில் இருந்து நெல்லைக்கு நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிப்பேன். திண்டுக்கல் வரை உள்ள இரட்டை ரெயில் பாதை திட்டத்தை கொல்லம் வரை அதிகரித்து தினமும் சென்னைக்கு ரெயில் விடுவதற்கு ஏற்பாடு செய்வேன். செண்பகவல்லி அணை திட்டத்தை மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்ற முயற்சி எடுப்பேன். குற்றாலத்தை தேசிய சுற்றுலா வரைபடத்தில் இடம் பெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்வேன்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியால் சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் அந்த தொழிலாளர்களின் வாழ்வு மலர உரிய நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக தென்காசி தொகுதியில் விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது. நான் விவசாயத்தில் பட்டப்படிப்பு படித்தவன். எனவே விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், தி.மு.க. அவை தலைவர் முத்துப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.