குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2019-03-30 22:30 GMT
நாமக்கல், 

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்) என்பது பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளையும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அனைத்தும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. அதில் குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகள் கையாளப்பட்டது.

ஆனால் தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, போக்சோ சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் போக்சோ சட்டம் தலையீடு செய்யும்.

பாலியல் தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சீண்டல், ஆபாச படம் எடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில், 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு ஆண்டுக்குள் வழக்கு முடிய வேண்டும். தண்டனை நிரூபணம் ஆகும் பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையில் இருந்து, கடுங்காவல் மற்றும் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும். சிலவகை பாலியல் வன்முறைக்கு கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக போலீசார், பாதுகாப்பு படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்களோ அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களோ குற்றம் இழைக்கும்போது, அதிக தண்டனை உண்டு என இந்த சட்டம் தெளிவுபடுத்துகிறது.

எனவே, இந்த சட்டத்தின் கீழ் குழந்தைகளை பாதுகாக்க, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அடங்கிய போக்சோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜீ தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 94425-64942 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது நாமக்கல் மாவட்ட குற்ற பதிவேடு கூடத்திற்கோ நேரில் சென்று புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்