தேர்தல் செலவு கணக்கை முறையாக காண்பிக்காத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை
தேர்தல் செலவு கணக்கை முறையாக காண்பிக்காத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி,
தேர்தல் செலவு கணக்கை முறையாக காண்பிக்காத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர்கள் சீமா சர்மா ஜெயின், துக்கி ஷியாம் பெய்க் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
நோட்டீஸ்
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சம் வரை செலவினம் மேற்கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் தாங்கள் செய்த செலவுகள் குறித்த கணக்கை காண்பிக்க தேர்தல் செலவின பார்வையாளர்களால் 3 முறை அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் செலவு கணக்கை காண்பிக்க வேண்டும். முறையான கணக்கு காண்பிக்காத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தில், வேட்பாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து வகையான விளம்பரங்களும் கண்காணிக்கப்படும். எனவே, தினசரி நாளிதழ்கள், உள்ளுர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வெளியிட ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவின் மூலம் உரிய அனுமதி பெற வேண்டும்.
பறிமுதல்
தேர்தல் தொடர்பான பிரசாரங்களுக்கு சுவிதா இணையதளத்தில் முன்அனுமதி பெற வேண்டும். குறிப்பிட்ட தொகுதியில் வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். மாவட்டம் முழுவதும் வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றால் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் ஒட்டுவில்லைகள் கண்டிப்பாக ஒட்டியிருக்க வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நட்சத்திர பேச்சாளர்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தலைமை தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். வேட்பாளர்களை ஆதரித்து பேசும் முக்கிய தலைவர்கள் ஏப்ரல் 16-ந்தேதி மாலைக்குள் அந்தந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்.
செல்போனுக்கு அனுமதி கிடையாது
வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு காலை 7 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு காண்பிக்கப்படும். வாக்குச்சாவடி மையத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. வாக்குச்சாவடி முகவர்களை இதுவரை நியமனம் செய்யாதவர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அடையாள அட்டை பெறாதவர்கள் 2 புகைப்படம் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் 3 முறை தினசரி நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும், 3 முறை ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரம் குலுக்கல் முறையில் தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரம் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு கம்ப்யூட்டர் மூலம் 2-வது முறையாக குலுக்கல் நடைபெறும். அதேபோல், ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 3 வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் இருப்பார்கள்.
வாக்கு எண்ணிக்கை
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.