“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்” கனிமொழி எம்.பி. பேச்சு
“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
திருச்செந்தூர்,
“பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்” என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
மகளிர் அணி ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி எம்.பி. பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உரிமைகள் பறிக்கப்படும்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. பெண்களுக்கு வாக்குரிமையை பெற்று தந்தது தந்தை பெரியாரின் திராவிட இயக்கம். நாட்டிலேயே பெண்களுக்கு முதன்முதலாக திருமண உதவித்தொகையை வழங்கியவர் கலைஞர் கருணாநிதிதான். உள்ளாட்சி தேர்தலிலே 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதும் கருணாநிதிதான்.
மத்திய பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தர மறுக்கிறது. மேலும் பெண்களுக்கு குறைந்தபட்ச அங்கீகாரத்தையும் தர மறுக்கிறது. பா.ஜனதாவின் சித்தாந்தம் பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக, அடித்தட்டு மக்களாக கருதுகிறது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படும்.
ரூ.50 ஆயிரம் கடன்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வீட்டில் ஒரு பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தேசிய ஊரக தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்களுக்கு பதிலாக 150 நாட்கள் பணி வழங்கப்படும். பழைய முறைப்படி கியாஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் சுழல்நிதி வழங்கப்படும் என்று எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகவும் விரைவில் பதவி ஏற்பார்கள். அப்போது ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
அடிப்படை வசதிகள்
அ.தி.மு.க. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், செயற்கைக்கோளை சுட்டதாகவும், தூத்துக்குடியில் புல்லட் ரெயிலை விடுவதாகவும் கூறுவார்கள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முதலில் தீருங்கள். பெண்களின் உரிமைகளை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
கூட்டத்தில், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
வாக்கு சேகரிப்பு
முன்னதாக கனிமொழி எம்.பி. குரும்பூர் அழகப்பபுரத்தில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் அவர், காரவிளை, சோழியக்குறிச்சி, சேதுசுப்பிரமணியபுரம், சேதுக்குவாய்த்தான், தொட்டியன்குடியிருப்பு, குரங்கணி, தென்திருப்பேரை, மாவடிபண்ணை, மணல்மேடு, மேல கடம்பா, குருகாட்டூர், மணத்தி, புறையூர், கல்லாம்பாறை, குரும்பூர், நாலுமாவடி, பணிக்கநாடார்குடியிருப்பு, இடையன்விளை, துரைச்சாமிபுரம், கச்சனாவிளை, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் சென்று கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், நவீன்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.