கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதியில் திடீர் தீ
கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனி இரண்டாவது குறுக்கு தெருவில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியையொட்டி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அந்த விடுதியின் ஒரு அறையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. பின்னர் சிறிது நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக இது குறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.