கடலூர் முதுநகர் அருகே தொழிலாளி விஷம் குடித்து சாவு தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி கைது

கடலூர் முதுநகர் அருகே தொழிலாளி விஷம் குடித்து செத்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-30 23:00 GMT
கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 39). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தேவி என்கிற சங்கர் தேவி(35). இந்த நிலையில் தேவிக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலா என்கிற பாலகந்தன்(40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

இதுபற்றி அறிந்த சின்னதுரை தேவியை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் பாலகந்தனிடம் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதன் காரணமாக சின்னதுரைக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் தேவி, சின்னதுரையை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த சின்னதுரையை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னதுரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவருடைய அக்காள் குமாரி கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தேவி, பாலா ஆகிய 2 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை கைது செய்தனர். பாலாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்