கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-03-30 22:45 GMT
கள்ளக்குறிச்சி, 

புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் சங்கர்(23), பாபு(24) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி பாபு உள்ளிட்ட 3 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டுக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் என்ற இடத்தில் சென்ற போது, திடீரென சங்கரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் சங்கர், பாபு ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சங்கர், பாபு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பலியான தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சங்கர், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்