வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வாங்கிய கடனை அடைக்க முடியாத வேதனையில் நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-03-30 23:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் பொன்.அண்ணாமலை நகரில் வசித்து வந்தவர் சிதம்பரம் மகன் கோபால் (வயது 39). இவர் விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் உள்ள ஒரு நகை பட்டறையில் கடந்த 2½ வருடங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த நகை பட்டறையின் உரிமையாளர் தட்சிணாமூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 லட்சத்தை கடனாக பெற்றார். அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாததால் கடந்த ஒரு மாதமாக கோபால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு கோபால் வீட்டிற்கு தட்சிணாமூர்த்தி சென்று அவரிடம் சமாதானம் பேசி வேலைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இருப்பினும் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கோபால் மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோபால், தான் வேலை பார்த்த பட்டறை அருகில் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபால் இறந்துவிட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்