விடுதலை செய்யக்கோரி நளினி ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் வக்கீல் புகழேந்தி தகவல்

விடுதலை செய்யக்கோரி நளினி ஐகோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

Update: 2019-03-30 23:00 GMT
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இந்த கொலை வழக்கில் 7 பேர் தங்களது விடுதலைக்காக போராடி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விடுதலைக்காக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் உள்ள முருகனை அவரது வக்கீல் புகழேந்தி நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ½ மணிநேரம் நீடித்தது. இதையடுத்து அவர் பெண்கள் ஜெயிலுக்கு சென்று நளினியை சந்தித்து ½ மணிநேரம் பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி போராடி வருகிறார். விடுதலை செய்யாமல் கவர்னர் காலதாமதப்படுத்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்யலாம். தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லை. எனவே நளினி சட்டபோராட்டத்தில் இறங்கி உள்ளார். அதன்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் தன்னை விடுதலை செய்யக்கோரி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் விசாரணை விரைவில் வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்