குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது ரசாயன வாயு தாக்கி 2 பேர் மயக்கம்

குடியாத்தத்தில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது ரசாயன வாயு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.;

Update: 2019-03-30 23:00 GMT

குடியாத்தம், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் ஆர்.நடராஜன், தேங்காய் வியாபாரி. இவரது வீட்டின் பின்பகுதியில் சுமார் 15 அடி ஆழமுள்ள தரைதள தண்ணீர் தொட்டி உள்ளது. தொட்டியில் நீர்கசிவு இருந்ததால் அதனை சரிசெய்யும் வேலைகள் நடைபெற்று வந்தது. 2 நாட்களுக்கு முன்பு தொட்டியில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

நேற்று நீர்கசிவை சரி செய்யும் பணியில் குடியாத்தம் ராஜகணபதி நகரை சேர்ந்த பொறியாளர் சச்சின் (வயது 39) என்பவரும், அவருக்கு உதவியாக சென்றாம்பள்ளியை சேர்ந்த தரணிகுமார் (20) என்ற கூலி தொழிலாளியும் ஈடுபட்டனர்.

காலை 11 மணி அளவில் அந்த தொட்டியில் தரணிகுமார் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தபோது ரசாயன வாயு தாக்கி மயங்கி உள்ளார். இதனைக்கண்ட பொறியாளர் சச்சினும் தொட்டியில் இறங்கினார். இதில் அவரும் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் நடராஜன் குடியாத்தம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வரதராஜன், தீயணைப்பு உதவி நிலைய அலுவலர் சரவணன், தீயணைப்பு வீரர்கள் அரிபிரசாத், பசுபதி, ரவிச்சந்தர், உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மிகவும் குறுகலான பகுதியில் மயங்கி கிடந்த 2 பேரையும் போராடி மீட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இருப்பினும் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்